Location | curriculum | Timing
பாரதியார் பிறந்த நாள் விழா- கொண்டாட்டம்   (11-Dec-2017)

கோபி பாரதி வித்யாலயா பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா. கோபி, டிச.11 கோபி பாரதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பாரதியார் பிறந்தநாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. கோபி பாரதி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில், எட்டயபுரத்து முண்டாசு கவிராஜன் மகாகவி பாரதியாரின் 135 வது பிறந்தநாள் விழா, பள்ளி தாளாளர் பி.ஆர்.வேலுமணி தலைமையில் நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு தாளாளர் வேலுமணி பேசுகையில், பாரதியார் தன் வாழ்நாள் முழுவதும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம், பெண் அடிமைத்தனம், ஜாதியக் கொடுமைகள் உட்பட பல அடக்கு முறைகளுக்கு எதிராக எழுத்துக்களால் சாட்டையடி கொடுத்த மாபெரும் எழுத்தாளராக திகழ்ந்தார். இந்திய சுதந்திரப் போராட்ட காலத்தில் விடுதலைப்போர் கவிதைகள் மூலமாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டினார். இந்திய பத்திரிக்கை உலகில் கார்ட்டூனை முதலில் அறிமுகம் செய்தவர். தமிழை நேசிப்பவர்கள் இவரை நேசிப்பார்கள், புதுமையை விரும்புகிறவர்கள் இவரை விரும்பாமல் இருக்க மாட்டார்கள். இளம் வயதிலேயே தமிழ்ப்புழமையுடன் திகழ்ந்தார். பதினொரு வயதில் கவிபாடுவதை கண்ட எட்டயபுரம் மன்னர் இவருக்கு பாரதி என்ற பட்டத்தை வழங்கினார். அதன் பிறகு சுப்பிரமணிய பாரதி என அழைக்கப்பட்டார். இவர் தமிழ் மட்டுமின்றி, சமஸ்கிருதம், வங்காளம், இந்தி, ஆங்கிலம், பிரேஞ்சு, தெலுங்கு போன்ற பிற மொழிகளிலும் புலமை பெற்று விளங்கினார் . எங்கும், எப்போதும், எல்லா உயிர்களிடமும் அன்பு செலுத்த வேண்டும் என்ற பாரதியாரின் வார்த்தைகளை பின்பற்றி நாம் வாழ வேண்டும் என்றார். விழாவில் பாரதியார் போல் வேடமணிந்து மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். பாரதியார் படத்திற்கு மாலை அணிவித்து பள்ளி தாளாளர், பள்ளி நிர்வாக அதிகாரி அமுதம், ஆசிரியைகள், பள்ளி நிர்வாகஅலுவலர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் மரியாதை செலுத்தினர்.